குமாரபாளையம் சவுண்டம்மன் கோயில் திருவிழா முகூர்த்த கால் நடுதல்...

குமாரபாளையம் சவுண்டம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடுதல் விழா நடைபெற்றது.;

Update: 2023-01-06 18:00 GMT

குமாரபாளையம் ராஜா வீதியில் உள்ள சவுண்டம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடுதல் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ராஜா வீதி மற்றும் சேலம் சாலை ஆகிய பகுதிகளில் என இரு சவுண்டம்மன் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கோயிலில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ராஜா வீதியில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, முகூர்த்தக் கால் நடும் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஜனவரி 14 ஆம் தேதி காவேரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல், 15 ஆம் தேதி சாமுண்டி அழைப்பு, பெரிய பொங்கல் வைத்தல், 16 ஆம் தேதி மகா ஜோதி அழைத்தல் வைபவம், ஜனவரி 17 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா. அதே நாள் மாலை அலங்கார திருவீதி உலா மற்றும் வாண வேடிக்கை நடைபெற உள்ளது.

மூகூர்த்த கால் நாட்டு விழாவுக்கு ஆலோசனை குழு தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆய்வர் வடிவுக்கரசி, தக்கார் சித்ரா, நிர்வாகிகள் சுந்தரம் கென்னடி, ஆறுமுகம், கோவில் அர்ச்சகர் குமரேசன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சவுண்டம்மன் கோயில் திருவிழா குறித்து அர்ச்சகர் குமரேசன் கூறியதாவது:

ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அல்லது சவுடேசுவரிதேவி, மற்ற மாநிலங்களில் சக்தி, சாமுண்டி, ஜோதி என மூன்று வடிவில் வழிபடப்படும் அம்மன் ஆவார். மற்ற பெயர்கள் பனசங்கரி, சூடாம்பிகை என்பதாகும். மேலும் இவர் தேவாங்கர் சமூகத்தின் குலதேவதை ஆவார். தமிழ்நாட்டில் கன்னட மொழி பேசும் தேவாங்க சமுதாயத்தினர் தேவாங்க செட்டியார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அவர்கள் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் இந்து சமயத்தின் சைவம், வைணவம் என்கிற இரு பிரிவுகளில் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலும் அனைவருக்கும் பொதுவாக இந்த ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர் என அர்ச்சகர் குமரேசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News