குமாரபாளையம்: ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மிஷின்கள் அறைக்கு சீல். துப்பாக்கியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மெசின்கள் வைத்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபின், ஜன. 28 முதல் வேட்புமனு பெறப்பட்டு பிப். 4ல் நிறைவு பெற்றது. குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 250 பேர் வேட்புமனு தாக்கல் செய்தபின், பரிசீலனையில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 244 பேர் களத்தில் இருந்தனர். வேட்புமனு திரும்ப பெறும் நாளில் 56 மனுக்கள் திரும்ப பெறப்பட்டதில், 188 வேட்பாளர்கள் பெயர்கள் இறுதி பட்டியலாக வெளியிடப்பட்டது.
பிப். 19ல் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி நேற்று 73 ஓட்டுச்சாவடிகளுக்கு 88 ஓட்டுப்பதிவு மிஷின்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திலிருந்து எடுத்து வரப்பட்டு, குமாரபாளையம் நகராட்சி நகர்மன்ற தலைவர் அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.