விழிப்புடன் பணிபுரியும் குமாரபாளையம் போலீசார்: திருட்டு சம்பவங்கள் முறியடிப்பு
குமாரபாளையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு திருட்டு முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.
குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலையில் சில நாட்களுக்கு முன் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது. போலீசாரின் ரோந்து பணி வாகன சத்தத்தால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் சமீபத்தில் போலீசாரிடம் சிக்கினர். இதேபோல் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் உள்ள எலெக்ட்ரிக்கல் கடை, டூவீலர் மெக்கானிக் கடை ஆகிய இரு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடைபெற்றது. அவ்வழியே போலீசார் ரோந்து வாகனம் வந்ததால் இந்த சம்பவமும் தடுத்து நிறுத்தப்பட்டது.
குமாரபாளையம் போலீசார் இரவில் விழிப்புடன் பணியாற்றி வருவதால் பல்வேறு திருட்டு சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், கடை உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், குமாரபாளையத்தில் எந்தவிதமான சமூக விரோத செயல்கள், திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குமாரபாளையம் காவல் நிலைய எல்லைப்பகுதி, நகர பகுதிகள், பேருந்து நிலையம், செக் போஸ்ட் பகுதிகள், புறவழிச்சாலை மாவட்ட நுழைவுப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து பணி தீவிரமாக மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.