குமாரபாளையம்: கோயில் கோபுரத்தில் ஏறி, இறங்க மறுத்த நபரால் பரபரப்பு
குமாரபாளையத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, பழைய சவுண்டம்மன் கோவில் கோபுரத்தில் ஏறி, இறங்க மறுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் ராஜா வீதி, பழைய சவுண்டம்மன் கோவில் கோபுரத்தின் மேல், நேற்று காலை 06:00 மணியளவில் ஒரு நபர் அமர்ந்து கொண்டிருப்பது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கேட்க, தன்னை யாரோ சிலர் கொலை செய்யப்போவதாக மிரட்டி வருகின்றனர். அதனால் இங்கு வந்து அமர்ந்து கொண்டேன். தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து மெல்ல, மெல்ல பேச்சு கொடுத்து, அவரை கீழே இறங்க வைத்தனர். விசாரணையில் அவர் தெற்குகாலனி பகுதியை சேர்ந்த மனநலம் பாதித்த சண்முகம், 50, என்பது தெரியவந்தது. அவருக்கு தைரியம் சொல்லி போலீசார் அனுப்பி வைத்தனர்.
கஞ்சா விற்பனை செய்த நபர் கைது:
குமாரபாளையம் அருகே கஞ்சா விற்பனை அதிகம் நடப்பதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பெரியதம்பி தலைமையில் குமாரபாளையம் அருகே கோட்டைமேடு நான்கு வழிச்சாலை பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஆனந்தராஜ், 30, என்பதும் விற்பனைக்காக பையில் 5.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். எஸ்.ஐ. செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.