சேர்மன் விஜய் கண்ணன் தலைமையில் குமாரபாளையம் நகராட்சி கூட்டம்
தூய்மை பணியில் தொய்வு என கவுன்சிலர்கள் குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் புகார் தெரவித்தனர்.
குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் வைத்த வாதங்கள் பின்வருமாறு:
கோவிந்தராஜ்:(தி.மு.க.): மார்க்கெட் ஏலம் எடுத்தவரிடம் ஏலத்தொகை வசூல் செய்யுங்க என கடந்த இரு கூட்டங்களில் கூறினேன். பொது நிதி இல்லாமல் வார்டுகளில் பணிகள் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கன்வாடி மையத்திற்கு இடம் தேர்வு செய்யவேண்டும்.
கதிரவன் சேகர் (தி.மு.க.) : மோரி பாலம் கேட்டிருந்தேன். பணிகள் நடந்து கொண்டுள்ளது. நன்றி. தூய்மை பணிகள் சரிவர நடப்பதில்லை. காவிரி நீர் வெள்ள பாதிப்பு மக்களுக்கு 520 வீடுகள் கட்டி தரப்படும் என்று எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். அதன்பின் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ஓ.ஏ.பி. வரவில்லை என முதியவர்கள் புகார் கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கமணி ஓ.ஏ.பி. தொகை அதிக நபர்களுக்கு போட்டு கொடுத்தார். மீதியுள்ள நபர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.
பழனிச்சாமி(அ.தி.மு.க.): எங்கள் வார்டில் உள்ள ரேசன் கடையை உரிமையாளர் காலி செய்ய வற்புறுத்தி வருகிறார். வேறு இடம் பார்த்து தாருங்கள். பொருட்கள் நிறைய சேதம் ஆகிறது. அரசு வழங்கும் மாத வாடகை 900 ரூபாய் மட்டுமே. யார் இப்போ அந்த வாடகைக்கு தருவார்கள்?
தீபா( தி.மு.க.): மார்க்கெட் ஏலத்தொகை 10 லட்சத்திற்கு அதிகம் இருந்தால் முதலில் பாதியும், ஏல ஒப்பந்த காலம் முடிவதற்குள் மீதியும் தரலாம் என விதிமுறை உள்ளது.
வேல்முருகன்: (சுயேச்சை): தூய்மை பணிகள் செய்வதே இல்லை. பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பொது நிதி இல்லாததால்தான் ஏலம் எடுத்தவரிடம் பணம் கேட்க சொல்கிறோம்.
பாலசுப்ரமணி:(அ.தி.மு.க.) : எங்கள் வார்டில் உள்ள ரோட்டில் ஜல்லி அல்லது வேறு மண் போட்டு இருந்திருக்கலாம். மழை பெய்து வருவதால் இப்போது போட்ட மண்ணால் சேறும் சகதியுமாக மாறி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் குறைவாக உள்ளனர். நகராட்சி பணியாளர்கள் பிளெக்ஸ், விளம்பர போர்டு எடுக்க வரும்போது கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட டூ வீலர்களையும் சேர்த்து எடுத்து வருகிறார்கள்? யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?
சத்தியசீலன்:(தி.மு.க.) : சேலம் சாலையில் உள்ள மின் கம்பங்களை ஒரமாக எடுத்து போட சொல்லி கேட்டிருந்தோம். இதுவரை நடக்கவில்லை. துப்புரவு பணி நடப்பதே இல்லை.
கனகலட்சுமி (சுயேச்சை): காவிரி கரையோரம் வெள்ள பாதிப்பு தடுக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
சுமதி (தி.மு.க.) ; வடிகால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது.
ராஜ் (தி.மு.க.): மக்கள் துர்நாற்றம் வீசுகிறது என்று புகார் கூறி வருவதால் மக்கும் குப்பை குடோனை அகற்ற வேண்டும். புதிய தாலுகா கட்டிடம் கிடப்பில் உள்ளது. அது என்ன ஆனது?
ஜேம்ஸ்(தி.மு.க): 6 மேஸ்திரிகள் உள்ளனர்.ஆனால் யாரை கேட்டாலும் உங்கள் வார்டுக்கு நான் இல்லை என்கிறார்கள். அதனால் நாங்களே குப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பார்பவர்கள் கூட இவ்ளோ செலவு செய்து கவுன்சிலர் ஆனது இதற்குத்தானா? என்று கேட்கிறார்கள்.
பரிமளம் (தி.மு.க.) : அப்பன் பங்களா பாலம் வேலை கிடப்பில் உள்ளது. மக்கள் சிரமப்படுகிறார்கள். விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை தேவை.
அம்பிகா:(தி.மு.க): எங்கள் வார்டு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் பணிகள் மந்தமாக நடக்கிறது. பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளது என கடந்த கூட்டத்தில் கூட சொன்னேன். 900 ரூபாய் ஒரு நாய்க்கு ஆகிறது என்றீர்கள். உயிர் பெரிதா? பணம் பெரிதா? என்றேன். இதுவரை நடவடிக்கை இல்லை.
இவற்றிற்கு பதில் அளித்து சேர்மன் விஜய் கண்ணன் பேசியதாவது:-
ரேசன் கடைக்கு இடம் அங்கு இல்லை. முயற்சி செய்வோம். அப்பன் பங்களா பாலம் பணி மழையால் கால தாமதம் ஆகிறது. சுகாதார பணிகள் துரிதப்படுத்தப்படும். 25 தூய்மை பணியாளர்கள் நியமிக்க அனுமதி கேட்டோம். நிதி இல்லை என மறுத்து விட்டனர். காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என மாவட்ட கலெக்டர், எம்.பி. சொல்லியுள்ளனர். அவர்களை அங்கு அனுப்பிய பின் தற்போது உள்ள காவிரி கரையோர வீடுகள் இடிக்கப்படும். ஸ்மார்ட் கிளாஸ் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். . நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.