சுகாதாரத்துறையால் குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயரா..?

குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் நகராட்சிக்கு சுகாதாரத்துறை கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.;

Update: 2024-10-29 05:30 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகரமன்ற கூட்டம் நடந்தது. 

நகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் சுகாதாரத்துறை கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் நகராட்சிக்கு சுகாதாரத்துறை கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக கவுன்சிலர்கள் சரமாரி குற்றம்  சுமத்தினர்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

கதிரவன் (தி.மு.க.):

வடிகால் தூய்மை பணிக்கு ஆட்கள் வருவது இல்லை. பலமுறை சொல்லியும் பலனில்லை. ஆட்கள் பற்றாக்குறை என்கிறார்கள். இது குறித்து ஆலோசித்து ஆட்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மராஜன் (தி.மு.க.):

எனது வார்டில் சுகாதார பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? ஒவ்வொரு கூட்டத்தில் கேட்டுக்கொண்டு தான் உள்ளேன். ஆனால் யாரும் வருவது கிடையாது. போன் போட்டாலும் எடுப்பது கிடையாது. வடிகாலில் இருந்து வெளியில் எடுத்து போடப்பட்ட மண் குவியலில் மூன்று அடிக்கு செடிகள் முளைத்து உள்ளது. துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

கோவிந்தராஜ் (தி.மு.க.):

ஒரு ஆள் வந்து கொண்டிருந்தார். அவரும் வருவது இல்லை.போன் போட்டாலும் எடுப்பது இல்லை. ஆட்கள் வருவார்களா? இல்லையா? வார்டு மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பேட்டரி வண்டி என்ன ஆனது?

சுமதி (சுயேட்சை):

வடிகால் தூய்மை பணிக்கு ஆட்கள் வர சொல்லி எந்த பலனும் இல்லை. பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.):

குமாரபாளையம் நகராட்சி சிறந்த நகராட்சியாக விருது பெற்ற நகராட்சி. ஒவ்வொரு கூட்டத்தில் குப்பை அகற்றுவது பற்றி சொன்னால், அப்போதைக்கு சரி என்கிறார்கள். மீண்டும் அதை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். சுகாதார அலுவலர் சிறப்பாக பணியாற்றியவர்தான். இப்போது என்ன ஆனது என தெரியவில்லை. சிறந்த நகராட்சி எனும் பெயர் இல்லாமல் போகும் அளவிற்கு, குப்பைகளை அகற்றாமல், வடிகால்களை தூய்மை படுத்தாமல் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் தான் நகராட்சி சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.

வெங்கடேசன் (நகராட்சி துணை தலைவர், தி.மு.க.):

இவ்வளவு பேர் சொல்லியும் இன்னும் தங்கள் பணியை நிறைவாக செய்யவில்லை என்றால் என்ன செய்வது? முதலில் சுகாதாரத்துறை அலுவலர்கள் அந்தந்த வார்டு கவுன்சிலர்களை நேரில் சந்தித்து, வார்டுக்குள் வந்தால்தான் எங்கு, என்ன குறை என்பது தெரியவரும். எந்த கவுன்சிலர்களையும் அவர்கள் சந்தித்து என்ன பணிகள் உள்ளது? என்று கேட்பது இல்லை. மேலும் அடிக்கடி மீட்டிங் போட்டு, பணியாளர்களுக்கு பணிகள் பற்றிய விபரம் சொல்லி பணிகள் செய்யச் சொல்ல வேண்டும்.

விஜய்கண்ணன் ( நகராட்சி தலைவர் ):

ஆட்கள் பற்றாக்குறை என்றார்கள். அதை சரி செய்யப்பட்டது. குப்பை கொட்ட இடம் இல்லை என்றார்கள். அதனால்தான் குப்பை எடுக்க முடியவில்லை என்றார்கள். அதற்கும் இடம் ரெடி செய்து விட்டோம். அடுத்து குப்பை வண்டிக்கு டிரைவர் இல்லை என்றார்கள். ஆட்கள் நியமனம் செய்து அதனையும் சரி செய்தாச்சு. அடுத்து பொக்லின் ஓட்ட ஆள் இல்லை. அதனால் தான் பணிகள் செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள். எல்லாம் சரி செய்து கொடுத்தாலும் மெடிக்கல் லீவில் போய் விடுகிறார்கள். ஆக மொத்தம், சுகாதாரத்துறையினர் வேலை செய்வது இல்லை என்று முடிவு செய்து நகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி செயல்பட்டு வருகிறார்கள்.

இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News