குமாரபாளையத்தில் திருப்பம்: சுயேச்சை விஜய்கண்ணன் நகரமன்ற தலைவரானார்
குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன், 18 ஓட்டுக்கள் பெற்று நகரமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.;
குமாரபாளையம் நகராட்சியில், 33 வார்டுகளுக்கான நகரமன்றத் தேர்தலில் திமுக 14, அதிமுக 10, சுயேச்சை 9 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். திமுக தலைமையால், நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக சத்தியசீலன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரது அணியில் 11 பேரும், சுயேச்சையாக வெற்றி பெற்ற விஜய்கண்ணன் அணியில் 18 பேரும், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பாலசுப்ரமணி அணியில் 4 பேரும் என்று மூன்று அணிகளாக வந்து மார்ச் 2ல் பதவியேற்று கொண்டனர்.
இன்று நகரமன்றத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமை வகித்தார். சுயேச்சை உறுப்பினர் விஜய்கண்ணன், தி.மு.க உறுப்பினர் சத்தியசீலன் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் உறுப்பினர்கள் 18 பேர் விஜய்கண்ணனுக்கு ஆதரவாகவும், 15 பேர் சத்தியசீலனுக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தனர். இதில் விஜய்கண்ணன் வெற்றிபெற்றதாக, நகராட்சி கமிஷனர் சசிகலா அறிவித்தார்.
இது குறித்து விஜய்கண்ணன் கூறுகையில், எனக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றி. தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவரது ஆசி பெற்று, தி.மு.க.வில் இணைந்து, எனக்கு ஆதரவளித்த சுயேச்சை உறுப்பினர்களையும் தி.மு.க.வில் சேர வைத்து, மாநிலத்தில் முதன்மை நகராட்சியாக குமாரபாளையம் நகராட்சியை கொண்டுவர பாடுபடுவேன் என்றார்.