குமாரபாளையம் நகராட்சி வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர் ஒரே நாளில் ராஜினாமா
குமாரபாளையம் நகராட்சி வரி மேல்முறையீட்டுகுழு உறுப்பினர் ஒரே நாளில் ராஜினாமா செய்தார்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நியமன குழு, ஒப்பந்த குழு, வரி மேல் முறையீட்டு குழுவிற்கான தேர்தல் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நியமனக்குழு பொறுப்பாளராக அழகேசன், ஒப்பந்தக்குழு பொறுப்பாளராக வேல்முருகன், வரி மேல்முறையீட்டுக்குழு பொறுப்பாளர்களாக ரேவதி, ராஜு, கோவிந்தராஜ், கனகலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் அதிருப்தியடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் வரி மேல்முறையீட்டுக் குழுவில் நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் ராஜு ராஜினாமா செய்தார். நகராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க. கட்சியால் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியசீலன் தலைமையிலான அணியினர், சேர்மன் விஜய்கண்ணன் தலைமையிலான அணியினர் என இரு அணிகளாக இருந்து வருகின்றனர்.
வரி மேல்முறையீட்டுக்குழுவில் எதிர்தரப்பை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ராஜுவுக்கு, சேர்மன் தரப்பினர் வாய்ப்பு வழங்கியும், எதிர் தரப்பினர் எதிர்ப்பால் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது குறித்து சேர்மன் தரப்பினர் ஆலோசனை செய்து வருகின்றனர். கவுன்சிலர் ராஜு தனது ராஜினாமா கடிதத்தை நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் வழங்கினார். கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், நிர்வாகி ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.