கரடு முரடான பாதையில் தினமும் சிரமத்துடன் சென்று வரும் பொதுமக்கள்

குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் கரடு முரடான பாதையில் தினமும் சென்று பொதுமக்கள் விபத்துக்கு ஆளாகி வருகின்றனர்

Update: 2022-08-24 15:00 GMT

குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில்  கரடு, முரடாக காட்சியளிக்கும்  சாலை.

கரடு முரடான பாதையில் தினமும்  சிரமத்துடன் பொதுமக்கள் சென்று வரும் நிலை நீடிக்கிறது. குறிப்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் கரடு முரடான பாதையில் தினமும் சென்று, விபத்துக்கு ஆளாகி வரும் பொதுமக்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி வருகிறார்கள்.

குமாரபாளையம் அம்மன் நகர் சாலைக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை விமோசனம் ஏற்பட்ட பாடில்லை. இந்த சாலையில் பொதுப்பணித்துறை நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்தார்கள் என ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது சாலை போடாமல் விட்டதால், மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. அப்பகுதியயை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றதால் முழுவதுமாக ஆக்கிரமிப்பு அகற்ற முடியவில்லை. பல ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பின் அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு ஏற்பட்டு, ஒரு வருடம் முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஏற்கெனவே கரடு முரடாக இருந்த சாலை, அதிக சேதமானது. இதில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சாலை சேலம் கோவை புறவழிச்சாலை, பள்ளிபாளையம் சாலையை இணைக்கும் மிக முக்கியமான சாலை. அம்மன் நகர், நாராயண நகர் போன்ற பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விசைத்தறி, ஸ்பின்னிங் மில்கள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவைகளுக்கு நூல்கள் கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் எடுத்து செல்லவும், லாரி, டெம்போ ஆகியவை எளிதில் வர முடியாத நிலையில் இந்த சாலை இருந்து வருகிறது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரிதும் அதிருப்தியடைந்து வருகிறார்கள். பள்ளி, கல்லோரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இது குறித்து நகராட்சி பொறியாளரும், தற்போதைய பொறுப்பு கமிஷனருமான ராஜேந்திரன் கூறியதாவது:

இந்த சாலை அமைக்க திட்ட மதிப்பீடு அனுப்பி உள்ளோம். அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் சாலை அமைக்கும் பணி துவங்கும் என்று   கூறினார். இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:சாலையை சீரமைக்க மேலும் தாமதம் செய்தால் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டதில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.



Tags:    

Similar News