குமாரபாளையம் கிரைம் செய்திகள் ரவுண்ட் அப்
குமாரபாளையம் பகுதியில் வாட்ச்மேன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
விஷம் குடித்து வாட்ச்மேன் பலி:
குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம், 67. இவர் ஈரோடு மாவட்டம், காஞ்சிகோயில் பகுதியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் திட்டியுள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை 01:00 மணியளவில் குடித்து விட்டு, வீட்டின் முன்பு படுத்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று படுக்கச்சொல்லி அவரது குடும்பத்தினர் சொல்லியுள்ளனர். வீட்டின் உள்ளே வந்து படுத்தவர் வாந்தி எடுக்க, அவரிடம் கேட்ட போது, விஷமருந்தி விட்டதாக கூறியுள்ளார். உடனே மாணிக்கத்தை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை 03:45 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் கொடுக்க வந்த மூதாட்டியை தள்ளி விட்ட போலீசார்:
பள்ளிபாளையம் அருகே கண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள், 82. இவரது கணவர் பல வருடங்கள் முன்பு இறந்து விட்டார். இவரது மகன்கள் ஆதரவில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சில நாட்களாக யாரும் உணவு உள்ளிட்ட எந்த உதவியும் செய்வதில்லை என்பதால் பள்ளிபாளையம் போலீசார் வசம் புகார் கொடுக்க வந்தார். பல நாட்கள் அலைகழித்து விட்ட நிலையில், நேற்றும் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுக்க வர, அங்கிருந்த போலீசார் வெளியில் தள்ளி விட்டனர். இதனால் அவர் அழுதபடி அங்குள்ள பொதுமக்களிடம் சொல்ல, பொதுமக்கள் எடுத்த வீடியோ அனைத்து வாட்ஸ் குரூப்களில் பரவியது. இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற மகன்கள் மீதும், போலீசார் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.