குமாரபாளையம் நகர தி.மு.க. சார்பில் தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள்
குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.;
குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் .மதுரா செந்தில் அறிவுறுத்தல்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில், நகர தி.மு.க செயலாளர் மற்றும் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் ஏற்பாட்டில்,அரிசி, பருப்பு, சர்க்கரை, ரவை, உப்பு உள்ளிட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள், மற்றும் குமாரபாளையம் நகராட்சி சார்பில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆணையாளர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், ராஜ் நகர பொறுப்புக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் வழியனுப்பி வைத்தனர்.
குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குமாரபாளையத்தில் பல நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோம்பு பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அனைத்து வார்டுகளில் கொசுத்தொல்லைகள் அதிகரித்து வருவதால், அனைத்து கவுன்சிலர்களும் நகரமன்ற கூட்டத்தில் பேசும் போது, அனைத்து வார்டுகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உத்தரவுப்படி, அனைத்து வார்டுகள், மார்க்கெட், பூங்கா, வாரச்சந்தை வளாகம் ஆகிய இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கியது. வீடு வீடாக தூய்மை பணியாளர்கள் சென்று, நோய் வராமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் வருகின்றனர்.