குமாரபாளையம் நகர் மன்ற துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
குமாரபாளையத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.;
குமாரபாளையம் நகராட்சியில் தலைவர், துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்கண்ணன், வெங்கடேசன் இருவரும் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களுக்கு நன்றி கூறினர்.
குமாரபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற நகரமன்ற தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் 18 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியசீலன் 15 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். நகரமன்ற துணை தலைவர் தேர்தல் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.
இதில் தி.மு.க. முன்னாள் நகர செயலரும், 25வது வார்டு தி.மு.க. உறுப்பினருமான வெங்கடேசன் துணை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், வெங்கடேசன் நகர மன்ற துணை தலைவராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி அலுவலக தலைவர் அறையில் நல்ல நேரம் பார்த்து அமருவதாக தலைவர் விஜய்கண்ணன் கூறியதால், துணை தலைவர் தேர்தல் முடிந்து இவரது ஆதரவாளர்களான 17 நகர்மன்ற உறுப்பினர்களும் தலைவர் அறையில் காத்திருந்தனர்.
அப்போது வெளியே தொண்டர்கள் நகராட்சி அலுவலகம் முன் திரண்டனர். வெளியே வந்த தலைவர், துணை தலைவர்களுக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் தலைவர் தனது அறைக்கு வந்து கமிஷனர் முதல் கோப்பினை வழங்க, முதல் கையொப்பமிட்டார் தலைவர் விஜய்கண்ணன். தலைவர் அறையில் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மாட்டப்பட்டிருந்தது. தலைவர் விஜய்கண்ணன் முருக பக்தர் என்பதால் இருவரது படங்களுக்கு நடுவே முருகர் படத்தை மாட்டி வணங்கினார்.
வெளியில் தயாராக நின்ற திறந்த ஜீப்பில் தலைவர், துணை தலைவர் இருவரும் ஏறி பேண்டு வாத்தியங்கள் முழங்க பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தவாறு வலம் வந்தனர்.