குமாரபாளையம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ பள்ளி வேட்டை...
குமாரபாளையம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.;
குமாரபாளையம் ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 15 ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேல் சாந்தி கவுதம், குமார், மது சர்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கொடியேற்றி வைத்தனர். டிசம்பர் 20 ஆம் தேதி வரை உஷ பூஜை, பூதபலி பூஜை, நவாஹம், பஞ்சகவ்யம், கலச பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, புஷ்பாஞ்சலி விழா, பகவதி சேவை விழா நடைபெற்றது.
இந்த நிலையில் பள்ளி வேட்டை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி வேட்டை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிறமோற்சவ விழாவை முன்னிட்டு, டிசம்பர் 25 ஆம் தேதி மண்டல பூஜை, சிறப்பு பஜனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை அம்மன்நகர் ஐயப்பன் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி குறித்து ஐயப்ப குருசாமிகள் கூறியதாவது:
சிவனுக்கும் மோகினி ரூபமான விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர் ஐயப்பன். பம்பா நதிக்கரையில் பந்தள அரசன் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். தாயின் நோய் தீர புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு செல்லும் வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்து மகிஷியை வதம் செய்தார்.
பின்னர், தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக்கோலத்தில் அமர்ந்தார் ஐயப்பன். ஆண்டுக்கு ஒருமுறை அய்யப்பனைக் காண பந்தள மன்னன் செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார்.
நெய்யில் செய்த பலகாரங்களையும் அவர் கொண்டு செல்வது வழக்கம். தேங்காய்க்குள் நெய் ஊற்றிக்கொண்டு சென்றால் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன் ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். அதனை நினைவு படுத்தும் வகையிலேயே சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டிச் செல்லும்போது நெய் தேங்காய் கொண்டு போய் அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து விட்டு அதை பிரசாதமாக வீட்டிற்குக் கொண்டு செல்கின்றனர் என ஐயப்ப குருசாமிகள் தெரிவித்தனர்.