குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்..
குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் பற்றிய விவரங்கள் வருமாறு:
கார் மோதி வியாபாரி படுகாயம்:
சேலம் மாவட்டம், தேவூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்றுமுன்தினம் காலை 10 மணி அளவில் தங்கை மகன் முனிராஜ்க்கு சொந்தமான மொபெட்டில், இடைப்பாடி சாலை, பாறையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு பின்புறமாக வேகமாக வந்த கார் மோதியதில், செங்கோட்டையன் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, அவர் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், கார் ஓட்டுனரான பள்ளிபாளையத்தை சேர்ந்த மணி என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இருசக்கர வாகனங்கள் திருட்டு:
குமாரபாளையம் காளியண்ணன்நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். சிமெண்ட் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 3 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் ராஜம் தியேட்டர் அருகே ஓட்டல் கடையில் உணவு வாங்கச் சென்றாராம்.
உணவு வாங்கிக் கொண்டு அவர் திரும்பிய போது, ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை காணவில்லை. அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. காணமல் போன வாகனத்தின் மதிப்பு 20 ஆயிரம் என கூறப்படுகிறது. காணாமல் போன வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி குமாரபாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல, குமாரபாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. எலெக்ட்ரிசியன். கடந்த மாதம் 10 ஆம் தேதி சேலம் சாலை ரெயின்போ கேபிள் அலுவலகத்தின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு வெளியில் வந்து பார்க்கும் போது, அவரது வாகனத்தை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்கவில்லை என்பதால், குமாரபாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகனங்கள் மீட்பு:
இதற்கிடையே, குமாரபாளையம் காவேரி நகர் புதிய பாலம் பிரிவில் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார் ரோந்து சென்ற போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் மணிகண்டன் மற்றும் கார்த்தி ஆகியோரது இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 37) என்பது தெரியவந்தது. போலீலார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 2 இரு வாகனங்களையும் மீட்டனர்.