குமாரபாளையத்தில் மறைந்த ஓவியருக்கு நடிகர் சாப்ளின் பாலு மலரஞ்சலி
குமாரபாளையத்தில் மறைந்த ஓவியருக்கு நடிகர் சாப்ளின் பாலு உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.;
குமாரபாளையத்தில் மறைந்த ஓவியருக்கு நடிகர் சாப்ளின் பாலு உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஓவியர் சங்க துணை தலைவர் சிவகுமார் உடல்நலமில்லாமல் உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் சங்க தலைவர் பொன் கதிரவன் தலைமையில், சிவகுமார் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஓவியரும், திரைப்பட நடிகருமான சாப்ளின் பாலு பங்கேற்று மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஓவியர் சிவகுமார் குறித்து நடிகர் சாப்ளின் பாலு பேசியதாவது:
சிவகுமார் உயரம் ஐந்தரை அடி. ஆனால் சமீபத்தில் குமாரபாளையம் நகரில் ஓவியர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த என் உருவத்தை எட்டு அடி உயரத்திற்கும் மேலாக பல இடங்களில் உயரமான சுவற்றில் வரைந்தார்.
இது அவர் தொழில் ஈடுபாடு. செய்யும் தொழிலில் அவர் போல் அனைத்து ஓவியர்களும் ஈடுபாட்டுடன் பாடுபட வேண்டும். மிகவும் அன்பானவர் என்பதால் அனைவரின் மனதிலும் இடம் பெற்றுள்ளார். அவர் நம் மனங்களில் வாழ்கிறார்.
ஒரு லட்சம் பேர் உள்ள இந்த குமாரபாளையம் நகரில், 30 பேர் மட்டும் தான் ஓவியர்களாக உள்ளனர். வரும்காலத்தில் இந்த தொழில் அழியாமல் இருக்க, பயிற்சி வகுப்புகள் நடத்தி, இளைஞர்களை இந்த தொழிலில் ஈடுபட வைக்க வேண்டும். அனைத்து ஓவியர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
சிவகுமார் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓவியர் சங்க குடும்பத்தினர் நிர்கதியாக இல்லாத அளவிற்கு நிதி ஆதாரத்தை பெருக்க முயற்சி செய்திட வேண்டும் என நடிகர் சாப்ளின் பாலு பேசினார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினைச் சேர்ந்த விடியல் பிரகாஷ், சரவணன், பாண்டியன், நாகராஜ், சசி, கருணாகரன், காளிமுத்து, தீனா, உள்பட பலர் பங்கேற்றனர்.