நிதி நிறுவன அதிபர் கடத்தல்: தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
பள்ளிபாளையம் அருகே நிதி நிறுவன அதிபர் கடத்தல் சம்பவத்தில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் 6 வருடங்களாக நிதி நிறுவனம் நடத்தி வருபவர் கவுதம். பாதரை பகுதியில் இவரது வீடு உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருக்கும் போது, வீட்டின் அருகே காருடன் நின்று கொண்டிருந்த மர்ம கும்பல் கவுதமை தாக்கி, மிளகாய் பொடியை சம்பவ இடத்தில் தூவி விட்டு காரில் கடத்தியதுடன், அவரது டூவீலரையும் கடத்தி சென்றனர்.
நீண்ட நேரமாகியும் கவுதம் வீட்டிற்கு வராததால் மனைவி திவ்யபாரதிக்கு கணவர் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வெப்படை போலீசில் திவ்யா புகார் கொடுக்க போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல் எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி நேரில் வந்து, கவுதம் குடும்பத்தாருடன் விசாரணை மேற்கொண்டார்.
கவுதம் அணிந்து இருந்த செருப்பு, ரத்தக்கறை, உடைந்த கண்ணாடி உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுபற்றி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கவுதம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகியாக இருப்பதால், கட்சி நிர்வாகிகள் வீட்டின் முன்பும், வெப்படை போலீஸ் ஸ்டேஷன் முன்பும் திரண்டனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.