காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டு விழா..!
குமாரபாளையத்தில் காளியம்மன் கோவிலில் மகா குண்டம், தேர்த்திருவிழா, பூச்சாட்டு விழா நடந்தது.;
குமாரபாளையத்தில் காளியம்மன் கோவிலில் மகா குண்டம், தேர்த்திருவிழா, பூச்சாட்டு விழா நடந்தது.
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பிப். 20ல் மறு பூச்சாட்டு, பிப். 21ல் கொடியேற்றம், பிப். 27ல் அம்மனுக்கு தீர்த்தக்குட புனித நீர் ஊற்றுதல், தேர் கலசம் வைத்தல், காவேரி ஆற்றுக்கு சென்று சக்தி அழைத்து வருதல், பிப். 28ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் விழா, அலங்கார ஆராதனை, பிப். 29ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டிவேடிக்கை, மார்ச். 1ல் தேர் நிலை அடைதல், நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் திருவீதி உலா, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 3ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளன. தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
கிராமத்து தெய்வங்கள்
கிராமப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள்.
அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.