நாமக்கல் மாவட்டம் முழுவதும் உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உரக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.;
நாமக்கல் மாவட்ட உரக்கடைகளில் வேளாண்மை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் முழுதும் உரக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் தமது அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் உர விற்பனை நிலையங்களில் மாவட்ட கலெக்டர் அவர்கள் உத்திரவின் பேரில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை கொண்டு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, டிச. 16 முதல் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிச. 8 முதல் பொட்டாஷ் உரத்தின் விலை ஒரு மூட்டைக்கு ஆயிரத்து நாற்பது என்ற விலையில் இருந்து ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே பழைய இருப்பில் உள்ள பொட்டாஷ் உரத்தை பழைய விலைக்கே விற்பனை செய்வதை உறுதி செய்யவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் மற்றும் உரம் பதுக்குதல் ஆகியவற்றை தடுக்கவும், இச்சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தடுத்தல், உர விற்பனை நிலையங்கள் அனுமதி பெற்ற உர நிறுவனங்களின் உரங்களை மட்டுமே விற்பனை செய்தல், உரம் இருப்பு மற்றும் பதிவேடுகள், கொள்முதல் பட்டியல்கள் உர விற்பனை நிலையத்தின் காலாவதி தேதி, விலை விபர பலகை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, மீறி செயல்படும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன் படி விற்பனை தடை விதிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைத்திடவும், சரியான விலையில் கிடைக்கவும், இது போன்ற கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து செயல் படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.