குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்: பொதுமக்கள் ஆர்வம்
குமாரபாளையம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமாரபாளையத்தின் பல இடங்களில் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் சிலை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிலை வியாபாரி கார்த்திகேயன் கூறுகையில், குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை நம்பி 20க்கும் மேற்பட்ட சிலை வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் இருந்து, விநாயகர் சிலை வாங்கி வந்து விற்பனை செய்வார்கள்.
பெரிய சிலைகள் 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்வார்கள். ஒரு கடைக்கு 200 முதல் 300 சிலைகள் விற்பனையாகும். சென்ற ஆண்டே விற்பனைக்காக வாங்கி வைத்தவர்களும் உண்டு. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா தியேட்டர் கூட செயல்பட துவங்கிய நிலையில் விநாயகர் சிலைகள் வைத்து பொது இடத்தில் வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என தெரிவித்தார்.
குமாரபாளையத்தில் தற்போது சிறிய விநாயகர் சிலைகள் 50 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டில் வைத்து வழிபடுவதற்காக சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.