குமாரபாளையம் பஸ் நிலையத்திற்குள் டூவீலர்களுக்கு தடை விதிக்க கோரிக்கை
குமாரபாளையம் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
குமாரபாளையம் பஸ் நிலையம் (கோப்பு படம்)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் நிலையத்தில் உள்ள மூன்று தளங்களில் ஒரு தளத்தில் டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், கார்கள் ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு தளத்தில் தற்காலிகமாக தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஒரு தளத்தில் மட்டும் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, அந்தியூர், பள்ளிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கிறது.
இதே தளத்தில் மினி பஸ்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது. காய்கறி மார்க்கெட் அருகில் இருப்பதால், காய்கறி கொண்டு வரும் மினி டெம்போக்கள் இதே தளத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. மிகவும் நெருக்கடியான இந்த தளத்தில் பஸ்கள் வரும் வழியில் டூவீலர்கள் அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளன. இவைகளால் பயணிகள் பலரும் விபத்தில் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில போதை ஆசாமிகளும் பஸ்கள் நிற்கும் இடத்தில் குடித்து விட்டு மட்டையாகி கிடக்கிறார்கள். இவர்களாலும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து, டூவீலர்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் தடுக்கவும், போதை ஆசாமிகள் பஸ் நிலையத்திற்குள் படுத்து தூங்க அனுமதிக்காமலும் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இந்த நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருங்காலத்தில் உயிர்ப்பலி வாங்கும் சாலை விபத்துக்கள் அதிகமாநக நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் குமாரபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.