வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்ய காேரி மநீம வேட்பாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை ரத்து செய்யக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு மநீம வேட்பாளர்கள் ஆர்ப்பாட்டம்.;
குமாரபாளையம் நகரமன்ற தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிகையை ரத்து செய்யக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் நகரமன்ற தேர்தல் பிப்.19ல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிகையை ரத்து செய்யக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு 14 வேட்பாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் காமராஜ் தலைமை வகித்தார்.
இது பற்றி காமராஜ் கூறியதாவது:- குமாரபாளையம் நகர்மன்ற தேர்தல் விதிமுறை மீறி நடைபெற்றுள்ளது. பணம், கொலுசு, புடவை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பறக்கும் படை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து போலீஸ் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. வார்டு 22, பூத் 27, வரிசை எண்: 319 ருக்மணி சண்முகசுந்தரம் என்ற இறந்தவரின் ஓட்டு போடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், போலீசாருக்கு உணவு, தேநீர் ஆகியவைகளை அரசியல் கட்சியினர் சிலர் வழங்கினார்கள். ஹோலிகிராஸ் பள்ளியில் வேட்பாளர்கள் பள்ளி வளாகத்தில் நின்று வாக்களார்களிடம் வாக்கு சேகரித்தனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஓட்டுச்சாவடி வளாகத்தில் இருந்தே வெளியேற சொல்லியுள்ளனர். பல முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த நகரமன்ற தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்பாட்டத்திற்கு பின் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான இயற்கைபிரியனிடம் குமாரபாளையம் நகரமன்ற தேர்தலை ரத்து செய்யகோரி மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ் உள்ளிட்ட வேட்பாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டியவாறு மனு கொடுத்தனர். இதில் வேட்பாளர்கள் சித்ரா, உஷா, யோகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.