தொழில் நலிவு- தொழிலாளி சாலையோரம் குடியேறிய அவலம்

Update: 2021-04-09 09:15 GMT

பள்ளிபாளையத்தில் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் நலிவடைந்து வரும் நிலையில் போதுமான வேலையின்றி மாற்றுத்திறனாளி கூலித்தொழிலாளி மனநலம் பாதித்த மனைவியுடன் சாலையோரம் குடியேறிய அவலநிலை நிகழ்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 30ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 லட்சத்துக்கும் மேலான விசைத்தறி கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். விசைத்தறி தொழிலில் மூலதனமாக இருந்து வரும் நூல் விலை கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பள்ளிப்பாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல விசைத்தறி கூடங்கள் பணி சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.இந்நிலையில் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள பெரியகாடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கருப்பண்ணன் என்பவர் கடந்த 6 மாதங்களாக விசைத்தறியில் போதிய வருமானம் இல்லாததால் சிரமப்பட்டு வந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வேலை இல்லாததால் குடும்ப செலவை சமாளிக்க முடியவில்லை. மேலும் அவரது மனைவி வாசுகி மனநிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு மருத்துவம் பார்க்கும் செலவும் கூடுதலாகியுள்ளது. வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் கருப்பண்ணன் அவதிப்பட்டுள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர் கருப்பண்ணனை வெளியேற்றி உள்ளார். வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை ஓரத்தில் உள்ள சாக்கடை மேலே திட்டில் குடியேறியுள்ளார்.இதன் மேல் வீட்டு சாமான்கள் அடுக்கி சமைத்து, சாப்பிட்டு அங்கேயே உறங்குகிறார். தெரு நாய் தொல்லைகள் என பல்வேறு இடையூறுகளை மாற்றுத்திறனாளி சந்தித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News