குமாரபாளையத்தில் 27ம் தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து 27ம் தேதி முதல் கொங்கு விசைத்தறிகள் சங்கத்தார் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் கட்டண உயர்வை கண்டித்து செப். 27 முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும், இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தர கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து தலைவர் சங்கமேஸ்வரன் கூறுகையில், கொரோனவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு துன்பத்திற்கு ஆளானோம். மேலும் ஏற்கனவே நூல் விலை உயர்வால் தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் மின் கட்டண உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் முற்றிலுமாக இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் 5 ஆயிரத்திற்கும் மேலான விசைத்தறிகள் நிறுத்தப்படுவதால், இதன் தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானம் இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதில் செயலர் சுந்தரராஜ், பொருளர் ராஜேந்திரன், உதவி தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.