குமாரபாளையத்தில் கரும்பு, மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
குமாரபாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கரும்பு, மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் கரும்பு இன்றியமையாததாக உள்ளது. விரைவில் பொங்கல் திருநாள் வருவதையொட்டி குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம், சானார்பாளையம், தட்டான்குட்டை, பல்லக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் செங்கரும்பு எனப்படும் கரும்பு வகையும், மஞ்சளும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி குழந்தைவேல் கூறுகையில், பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல், கரும்பு, மஞ்சள் சேர்ந்ததுதான். பொங்கல் நாளில் சூரிய பகவானுக்கு படையலிடும் போது கரும்பு மற்றும் மஞ்சள் உடன் சேர்த்து படையலிடுவது வழக்கம்.
குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு மற்றும் மஞ்சள் அதிகம் சாகுபடி செய்யபட்டுள்ளது. ஈரோடு, அந்தியூர், திருச்செங்கோடு, ராசிபுரம், சங்ககிரி, தேவூர் பவானி உள்ளிட்ட பல பகுதியில் இருந்து கரும்பு மற்றும் மஞ்சள் வாங்க வியாபாரிகள் வருவார்கள்.
இந்த ஆண்டு மழையும் குறைவில்லாமல் பெய்துள்ளது. கிழக்கு கரை வாய்க்காலில் 7 மாதமாக தண்ணீர் விட்டுகொண்டுள்ளனர். தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையால் அதிக நபர்கள் கரும்பு மற்றும் மஞ்சளை அதிகம் சாகுபடி செய்துள்ளனர். விளைச்சலும் நன்கு வந்துள்ளது. இதனால் விவசாயிகளும் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.