திருவிழாவையொட்டி பள்ளி விடுமுறை தலைமை ஆசிரியர் கையில்: மாவட்ட கல்வி அலுவலர்

குமாரபாளையம் திருவிழாவையொட்டி பள்ளி விடுமுறையை தலைமை ஆசிரியரே முடிவு செய்யலாம் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-08 13:30 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவிற்கு பூ மிதித்தல், தேர்த்திருவிழா நடைபெறும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் விடுமுறை விடப்படுவது வழக்கம். குமாரபாளையம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் புதன்கிழமை மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்கள் என்பதால், அடுத்து வரும் சனிக்கிழமை நாளில் விடுமுறை விடப்பட்ட நாளுக்கு உண்டான வகுப்பு நடத்த அனுமதி கேட்டு விடுமுறை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. கொரோனா விடுமுறைக்கு பின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி 6 நாட்கள் வேலை நாட்கள் என்பதால், எந்த நாளில் அதனை சமன் செய்வது என்பது தெரியாமல் விடுமுறை விடப்படாமல் உள்ளதாக மாணவர்கள் சிலர் கூறினர்.

இதனால் இந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்து வருகின்றனர். திருவிழா சமயத்தில் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வராத நிலையில் நாங்கள் மட்டும் சென்று என்ன செய்வது என ஆசிரியர்களும் புரியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

இது பற்றி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா கூறுகையில், குமாரபாளையம் திருவிழாவிற்காக விடுமுறை விடப்பட்டால் அதற்கு மாற்று வகுப்பு நடத்த எந்த நாள் என்பது புரியாத நிலை இருந்து வந்தது. கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், உள்ளூர் திருவிழா விடுமுறை விடப்படுவது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News