குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண விழா
குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில்களில் இன்று சுவாமிகளுக்கு திருமண விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மன் திருகல்யாண வைபோகத்தையொட்டி, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில்களில் சுவாமிக்கு திருமண விழா நடந்தது.
சித்ரா பவுர்ணமியையொட்டி ஆண்டுதோறும் குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில்களில் அம்மனுக்கு திருமண விழா நடைபெறுவது வழக்கம். நேற்று சேலம் சாலை சவுண்டம்மன் கோவில், ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் ஆகிய இரு கோவில்களில் அம்மனுக்கு திருமண விழா நடந்தது. சேலம் சாலை கோவிலில் காலை 06:30 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. சிறுமிக்கு சிவன் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்து வந்தனர். சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு அம்மனுக்கு திருமண உற்சவம் இனிதே நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது. இதே போல் ராஜா வீதி சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் இனிதே நடந்தது. இரு கோவில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. இரு கோவில்களிலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
குமாரபாளையம் ராஜா வீதி சவுண்டம்மன் கோவிலில் அம்மன் திருகல்யாண வைபோகத்தையொட்டி, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்
இது பற்றி தேவாங்கர் சமூகத்தினர் கூறியதாவது:-
இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அல்லது சவுடேசுவரிதேவி, மற்ற மாநிலங்களில் சக்தி, சாமுண்டி, ஜோதி என மூன்று வடிவில் வழிபடப்படும் அம்மன் ஆவார். மற்ற பெயர்கள் பனசங்கரி, சூடாம்பிகை என்பதாகும். மேலும் இவர் தேவாங்கர் சமூகத்தின் குலதேவதை ஆவார்.
தேவாங்க புராணத்தின் படி, தேவலர் தேவாங்கர் சமூகத்தின் மூலாதாரமாக விளங்குகிறார். அனைவருக்கும் ஆடை வழங்கி வந்த "அக்னி மனு" வீடு பேறு பெற்ற பிறகு துணிகளுக்கான தேவை மிக அதிகமானது. ஆடைகளை உருவாக்கவும் உலகிற்கு நெசவு செய்ய கற்றுக் கொடுக்கவும் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து தேவலர் உருவானார். விஷ்ணுவின் தொப்புளில் இருந்து தாமரை நூல் பெற்று வரும் வழியில் ஐந்து அசுரர்களின் ஒரு குழு அவரைத் தாக்கியது, அமாவாசை இருட்டில் அவர்கள் வலிமை மிக அதிகமாக இருந்தது. தேவலர் விஷ்ணுவின் சக்கரத்தை கொண்டு போராடி தோற்றார், கடைசியில் அவரை பாதுகாக்க சக்தி அம்மனை வேண்டினார். தேவி சக்தி மகிமையுடன் இருளை விரட்டும் பிரகாசமான கிரீடம் அணிந்து, சூலம் மற்றும் இதர ஆயுதங்களை கையில் கொண்டு சிங்கத்தின் மீது தோன்றினார். கடைசியாக அவர் அசுரர்களை கொன்றார். அவ்வசுரர்களுடைய இரத்தம் வெள்ளை,கருப்பு,சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவ்வசுரர்களுடைய வண்ணமயமான இரத்தத்தில் தேவலர் நூலை சாயம் ஏற்றினார்.பின்னர், ஒவ்வொரு அமாவாசை நாளிலும் அவளை வணங்கும்படி தேவலருக்கு அறிவுரை கூறினார். பின்னர் தேவலர் இமயமலையின் தெற்கு பகுதிக்கு சென்று, அமோத நகரை தலைநகராக கொண்டு "சகர" நாட்டினை ஆண்டார். புதிய ஆடைகளை நெய்து மும்மூர்த்திகள், திரிதேவிகள், தேவர் , அசுரர், கந்தர்வர், கின்னறர் மற்றும் சாதாரண மக்களுக்கு கொடுத்தார். மகாதேவரின் உடலிலிருந்து தோன்றியதலும் தேவர்களின் உடல் பாகங்களை மறைப்பதற்கு தேவலர் துணிகளை அளித்ததாலும், அவரது சமூகத்தினர் தேவாங்கர் (அங்க= உடல் அங்கம்) என பெயரிடப்பட்டனர். தேவலர் சூரியதேவனின் சகோதரி தேவதத்தையை மணந்தார். எனவே சூரியன் தேவாங்கர்களின் முதல் சம்பந்தி ஆவார். பின்னர் ஆதி சேடனின் மகள் சந்திரரேகையை மணந்தார், எனவேதான் தேவாங்க மக்கள் சேடர், ஜேண்டர் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்னர் அசுரராஜன் வக்கிரதந்தனின் மகள் அக்னி தத்தையை மணந்தார். தேவலரைப் பின்பற்றுபவர்கள் தேவாங்க அல்லது தேவாங்கர் என்று அழைக்கப்படுகின்றனர்.
கர்நாடகாவில் இந்த அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வந்த தேவாங்கர் சமுதாயத்தினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நெசவுத் தொழில் செய்து வந்த இவர்கள் தாங்கள் சென்று குடியேறிய ஊர்களிலெல்லாம் தங்களது தெய்வமாக ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலை அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கன்னட மொழி பேசும் இந்த தேவாங்க சமுதாயத்தினர் தேவாங்க செட்டியார் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்து சமயத்தின் சைவம், வைணவம் என்கிற இரு பிரிவுகளில் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலும் அனைவருக்கும் பொதுவாக இந்த ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இவர்கள் 10000குலம் கொண்ட இனம் ஆக இருக்கின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.