இல்லம் தேடி மரக்கன்றுகள் வழங்கல்
குமாரபாளையத்தில் பொதுமக்கள் இல்லம் தேடிச்சென்று மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் பொதுமக்கள் இல்லம் தேடிச்சென்று மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் இல்லம் தேடி மரக்கன்று, இல்லம் தோறும் மரக்கன்று, என்ற செயல்பாட்டின் அடிப்படையில் பொதுமக்கள் இல்லம் தேடிச்சென்று மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். குமாரபாளையம் தனலட்சுமி நடராஜா நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அவர்கள் வீட்டின் அருகே மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மரக்கன்றுகளை அடுத்த சில மாதங்களில் சிறப்பான முறையில் பராமரிப்பவர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட உள்ளது என நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதில் செயலாளர் பிரபு, உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, சக்திவேல், யாழினி உள்பட பலர் பங்கேற்றனர்.
மரக்கன்றுகள் பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 86678 74420,மற்றும் 99522 57652.
மரம் வெட்டியதை தடுத்த அதிகாரிகள்
குமாரபாளையத்தில் மரம் வெட்டியதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள ஒரு வீட்டின் முன்பு இருந்த பெரிய மரம் வெட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த மாவட்ட தே.மு.தி.க. மகாலிங்கம், இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இது கண்டதும், நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து, இது போல் மரங்கள் வெட்டக்கூடாது என சொல்லி, மரம் வெட்டும் பணியை பாதியில் நிறுத்தினார்கள்.
இது குறித்து மகாலிங்கம் கூறியதாவது:
வீட்டுக்கு ஒரு மரம் வையுங்கள் என்று கூறிவிட்டு, சாலை அமைக்கிறோம், வடிகால் அமைக்கிறோம் என்று கூறி இருக்கும் மரங்களை ஊர் முழுதும் ஒப்பந்ததாரர்கள் வெட்டிக்கொண்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளேன். மரங்களை வெட்டாமல், பணிகள் செய்தால், நமக்கு, நம் சந்ததிக்கு தான் நல்லது என்று யாரும் உணர்வது இல்லை. மரங்கள் வெட்டுவோர் மீது அரசு சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.