குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு
குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்து, தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.;
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் குணசுந்தரி, 41. இவரது கணவர் சீரங்கன், 45. கூலித்தொழிலாளி. இவர் தினமும் குடித்து விட்டு வருவதும், வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்ததாலும் கணவன், மனைவி இருவருக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று பகல் 02:30 மணியளவில், வீட்டிற்கு குடிபோதையில் வந்த கணவனிடம், குணசுந்தரி வீட்டு செலவுக்கு பணம் கேட்டுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த சீரங்கன், மனைவியை அடித்து தாக்கியதில், வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இனிமேல் பணம் கேட்டால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
பலத்த அடிபட்ட குணசுந்தரி, சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி குணசுந்தரி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் நேரில் சென்ற போது சீரங்கன் தலைமறைவானது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.