குமாரபாளையத்தில் குதிரைகளால் இடையூறு: 'கடிவாளம்' போடுவது யார்?
குமாரபாளையம் நகரப்பகுதியில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
குமாரபாளையத்தில், அதிகளவில் குதிரைகள் நகரின் பல பகுதிகளில் சுற்றி வருகின்றன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. குதிரையின் உரிமையாளர்கள் அவற்றுக்கு தீனி கொடுக்க முடியாததால், இவ்வாறு தெருவில் திரிய விட்டு விடுகிறார்கள். சில நாட்கள் முன்பு உணவு இல்லாமல் நகராட்சி அலுவலகம் அருகே, குதிரை ஒன்று இறந்து கிடந்தது. இதனை நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியதும், உடனே அதனை அகற்றி விட்டனர்.
அதேபோல், நேற்று சேலம் - கோவை புறவழிச்சாலையில், கத்தேரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள வடிகால் பள்ளத்தில் குதிரை ஒன்று விழுந்தது. அதனால், எழுந்திரிக்க முடியாமல் தண்ணீரில் தத்தளித்து. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே நேரில் வந்த மீட்புக்குழுவினர், குதிரையை பள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். புறவழிச்சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால், வாகன விபத்து அதிகரித்து பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். பலருக்கும் இடையூறு ஏற்படுத்தும் குதிரைகளை பிடித்து, ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்; சாலையில் குதிரைகளை விடுவதால் விபத்துக்கு காரணமாகும் குதிரையின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.