சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக குமாரபாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Update: 2024-05-12 13:15 GMT

சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

குமாரபாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் பேருந்து நிலையம் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, அம்மா உணவகம் பகுதியில் அனைத்து பேருந்துகளும் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் சென்று வருகிறது.

தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால், சில நிமிடங்கள் கழித்து புறப்பட வேண்டிய பேருந்துகள், இடைப்பாடி சாலையில் வரிசையாக நிறுத்தப்படுகிறது. இதனால் இடைப்பாடி சாலையிலிருந்து சேலம் சாலைக்கு வரும் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சேலம் சாலையிலிருந்து இடைப்பாடி சாலைக்கு வரும் வாகனங்கள் காவல் நிலையியம் அருகில் உள்ள வளைவில் எதிர் எதிராக வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல வெகு நேரம் ஆகிறது.

இதே போல் சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால், அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குமாரபாளையம் பேருந்து நிலையம் கட்டுமான பணி, மேம்பால கட்டுமான பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றாகிவிட்டது. ஆயினும் அதுவரை, கத்தேரி பிரிவில் இருபுறமும், காவல் நிலைய பிரிவிலும், பேருந்து நிலையம் நுழைவுப்பகுதியிலும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சற்று சிரமமின்றி சென்று வர உதவியாக இருக்கும்.

Tags:    

Similar News