குமாரபாளையம் திமுக நிர்வாகியின் சிகிச்சைக்கு உதவிய சுகாதாரத் துறை அமைச்சர்..
கல்லீரல் பாதிக்கப்பட்ட குமாரபாளையம் திமுக நிர்வாகியின் மருத்துவ சிகிச்சைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உதவி செய்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த சரவணனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏழ்மை நிலையில் உள்ள திமுக நிர்வாகி சரவணனுக்கு உதவி செய்யும்படி திமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், நகர செயலாளர் செல்வம் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, உடனடியாக, சரவணன் குறித்த தகவலை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு உதவி செய்யும்படி உத்தரவிட்டார். மேலும், கல்லீரல் பாதிக்கப்பட்ட சரவணனை சென்னை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கும்படியும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, கல்லீரல் பாதிக்கப்பட்ட சரவணன் உரிய பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சரவணனை சேர்த்து உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகி சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர் உள்ளிட்டோருக்கு சரவணனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து உள்ளனர்.