அரசு பள்ளி மாணவர் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கடிதம்
குமாரபாளையம் அருகே ஒரு வருடம் அரசு பள்ளியில் படிக்காத மாணவன் இட ஒதுக்கீடு கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேனிலைப்பள்ளியில் மாறன் இளந்திரையன் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழ் வழியில் 7ம் வகுப்பு முதல் படித்து வருகிறார். மருத்துவ படிப்பல் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற 6ம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற விதி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மிகவும் மனமுடைந்த மாணவர் தமிழக முதல்வருக்கு கருணை அடிப்படையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டி கடிதம் எழுதி உள்ளார். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து வருகையில், இவரது தந்தை அரசு பள்ளி ஆசிரியராக இருந்தும் அரசு பள்ளியில் படிக்க வைத்த செயல்பாட்டிற்கு அங்கீகாரம் தரும் வகையில் மாணவருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க உதவி செய்திட கோரிக்கை எழுந்துள்ளது.
இதனை மாவட்ட கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ. மாவட்ட அமைச்சர், உள்ளிட்ட தமிழக முதல்வர் பரிசீலனை செய்திட வேண்டி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.