முழு ஊரடங்கு: குமாரபாளையத்தில் தீவிர ரோந்து பணி மேற்கொண்ட போலீஸார்
முழு ஊரடங்கையொட்டி குமாரபாளையத்தில் போலீஸார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்;
முழு ஊரடங்கை கண்காணிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போலீஸார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.
தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்ததையடுத்து ஜனவரி 22 இரவு 10:00 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றக்கூடாது என போலீஸார் அறிவித்திருந்தனர். அதன்படி, குமாரபாளையம் போலீசார் குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். இரவில் சாலைகளில் சுற்றித்திரிந்த பொதுமக்களை போலீஸார் விசாரணை செய்து அனுப்பி வைத்தனர்.
நகர பகுதியில் பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, காவேரி நகர் காவிரி பாலம் பிரிவு உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீஸார் வெளியில் நடமாடும் பொதுமக்களை எச்சரித்து, காரணமில்லாமல் வெளியே வந்தவர்கள், முக கவசங்கள் அணியாதவர்கள், ஓட்டுனர் உரிமம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
விதி மீறி செயல்பட முயற்சித்த டீக்கடை, பேக்கரி உள்ளிட்ட கடையினரை எச்சரித்து கடைகளை அடைக்கச்செய்தனர். திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு சென்றவர்களிடம் அழைப்பிதழ் காட்ட சொல்லி, விசாரித்து அனுப்பி வைத்தனர்.