மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம், உள்ளடங்கிய கல்வி திட்டம் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அறிவுறுத்தல் படி, உதவி திட்ட அலுவலர் மகேஷ்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கனகராஜ், வழிகாட்டுதல் படி நடைபெறவுள்ள இந்த முகாம் காலை 09:30 மணி முதல், மாலை 01:00 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமை நகராட்சி சேர்மன் செல்வராஜ், துணை சேர்மன் பாலமுருகன் துவக்கி வைத்தனர். ஆவாரங்காடு பள்ளி பி.டி.ஏ.தலைவர் செல்வம், மனோகரன், கவுன்சிலர் யுவராஜ், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தவமணி, குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த முகாமில் பார்வையின்மை, குறைப்பார்வை, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், காது கேளாமை, உடலியக்க குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல வகையான குறைபாடுகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்களுக்கான பதிவு உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
மனநல மருத்துவர் மாணிக்கம், குழந்தைகள் நல மருத்துவர் தினேஷ்குமார், முடநீக்கியல் மருத்துவர் முருகேசன், காது, மூக்கு தொண்டை டாக்டர் பிரீத்தி, கண் மருத்துவர் மைதிலி, கண் பரிசோதகர் நிர்மலா, காதொலி பரிசோதகர் வனிதா லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்று சிகிச்சை செய்தனர். 136 மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெற்றனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் முத்துக்குமரன், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர்.