திறமை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது.. முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு…
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு திறமை இல்லாத அரசாக உள்ளது என குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் நாராயணன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:
குலாலர் சமுதாயத்தினர் தயாரித்த பானை இல்லாமல் பொங்கல் விழா இல்லை, கார்த்திகை தீப திருவிழா இல்லை, விநாயகர் சதுர்த்தி விழா இல்லை எனும் வகையில் மக்களின் வாழ்க்கையில் பிணைந்து உள்ளனர். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுடன், விவசாயிகள் நலன் காக்க கரும்பு கொள்முதல் செய்து வழங்கினர்.
அப்போது, பொங்கல் பரிசாக மக்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுகவினர் ஆட்சியில் இருந்த எங்களை பார்த்து கூறினர். ஆனால், இப்போது ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறார்கள். பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருவதுதான் அவர்கள் நோக்கம். நிர்வாக திறமை இல்லாததால்தான் கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் வழங்க இயலாமல் உள்ளனர். திமுக அரசு திறமை இல்லாத அரசாக உள்ளது என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் கூறியதாவது:
கரும்பு விவசாயிகள் அரசு கொள்முதலுக்காக காத்து இருக்கிறார்கள். தமிழக அரசு அதனை பரிசீலிக்க வேண்டும். விவசாயிகள் நலன் பாதுகாக்க படவேண்டும். உதயநிதி கடந்த இரு தேர்தலில் மாநிலம் முழுதும் பிரச்சாரம் செய்தார். அதற்காக அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.
அவரது நிர்வாகத் திறமையை வெளிக்காட்ட இது உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அத்திக்கடவு அவினாசி திட்டம் ஜனவரி மாத முடிவில் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து புகார் சொல்வது எதிர்கட்சிகள் கடமை. அதன்படி சொல்லி வருகிறார்கள். ஆயினும் ஒவ்வொரு புகார் குறித்தும் முதல்வர் சரியப்பு கவனம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என ஈஸ்வரன் தெரிவித்தார்.