சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் வைபவம்
குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் வைபவம் நடந்தது.;
குமாரபாளையத்தில் காளியம்மன், மாரியம்மன் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அனைத்து சமூக காளியம்மன் கோவில், கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு விழா நடந்தது.
நேற்று அரசு மருத்துவமனை எதிரில் உள்ள காமராஜபுறம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் வைபவத்தையொட்டி, கோவில் வளாகத்தில் கணபதி யாகம் நடத்தப்பட்டது. பாண்டுரங்கர் கோவிலில் சீர் பெறுதல் வைபவம் நடந்ததுடன், ராமர் கோவிலிலிருந்து பூச்சொரிதல் விழாவிற்காக, பெண்கள் பூக்கூடைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
ராமர் கோவிலில் தொடங்கிய ஊர்வலம் விட்டலபுரி, சேலம் சாலை, ராஜா வீதி, கலைமகள் வீதி, வழியாக கோவிலில் நிறைவு பெற்றது. திருநங்கைகள் பலரும் பங்கேற்று பூக்கூடைகளை எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
பிப். 20 கம்பம் நடுதல், பிப். 27ல் பூஜை கூடைகள் ஊர்வலமாக எடுத்து வருதல், காவேரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், பிப். 28ல் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பொங்கல் பூஜை, பிப். 29ல் கம்பம் காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், மார்ச். 1ல் மஞ்சள் நீர் மெரவனை, மார்ச், 2ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகிய வைபவங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.