வெள்ள பாதிப்பு நிவாரணப்பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2022-08-30 14:45 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டம் 

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது: மாலை 04:30 மணி முதல் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீரும், இரவு 09:30 மணிக்கு மேல் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீரும் வரவுள்ளது. கபினி அணை, கே.ஆர்.எஸ் அணை நிரம்பியதால் நாளை காலை இரண்டு லட்சத்து 12 ஆயிரம் முதல் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் கன அடி வர வாய்ப்பு உள்ளது. நீர் வரத்து குறைய தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது. மாவட்டத்திலும் மழை தினமும் பெய்து வருகிறது.

இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் காவிரி ஆறு, ஏரி உள்ளிட்ட பகுதிகளில் மொபைலில் செல்பி எடுப்பது, நீச்சல் அடிப்பது, மீன் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். தற்போது 7 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 698 குடும்பங்கள் வரை இதற்கு முன்பு தங்க வைத்தோம். இப்போது அதிகப்படியான தண்ணீர் வந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகள் கரைக்க குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன், பாதுகாப்பான முறையில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2,3 நாட்கள் உள்ளதால் அப்போதைக்கு ஏற்ப தகவல் மாவட்ட நிர்வாகத்தால் தரப்படும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவருக்கு கூட நிவாரண தொகை கிடைக்க வில்லை என ஒரு புகார் கூட வரவில்லை. கொக்காராயன் பேட்டை பள்ளி இருப்பதே நீர் நிலைக்கு அருகில்தான் உள்ளது. அங்குள்ள வாய்க்காலை ஆழப்படுத்தி தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

இதில், தாசில்தார் தமிழரசி, நகராட்சி கமிஷனர் (பொ)ராஜேந்திரன், போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி, மின்வாரிய அலுவலர்கள் வண்ணப்பதாஸ், சீனிவாசன், ஸ்ரீதர், நகராட்சி எஸ்.ஓ. ராமமூர்த்தி, பள்ளிபாளையம் நகராட்சி கமிஷனர் கோபிநாத், பொறியாளர் ரேணுகா, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தியாகராஜன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News