குமாரபாளையம்: காவிரியில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்
காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் திரும்பி வராதது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.;
குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை சானார்பாளையம் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன், 45. மீன் பிடிக்கும் தொழில் செய்து வருபவர். இவர் நேற்று காலை 11:00 மணியளவில் காவிரி ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்றார். வழக்கமாக மாலை 03:00 மணியளவில் வீடு திரும்பும் இவர், நேற்று வீடு திரும்பவில்லை.
இதனால் கவலையடைந்த உறவினர்கள், குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் நேரில் வந்த மீட்புக்குழுவினர், காவிரி ஆற்றங்கரையில் பரிசல் மட்டும் இருப்பதை கண்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று எண்ணி, மாலை 06:00 மணி வரை தேடி பார்த்தனர். இருள் சூழ்ந்த நிலையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி அவரது மனைவி லட்சுமி, 39, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மீன்பிடிக்க தோட்டாவை போட்ட போது, கையில் வெடித்து, லட்சுமணன் தண்ணீரில் மயக்க நிலையில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.