பவானியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பட்டாசு, குடைகள் பரிசு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பட்டாசு பெட்டிகள், குடைகள் பரிசாக வழங்கப்படும் என வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நான்காம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் அக். 10ல் நடைபெறுகிறது. இம்முகாமில் 18 வயது நிரம்பிய அனைவரும் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆர்வத்தை தூண்டவும் பவானி தொகுதியை சேர்ந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் 105 பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பரிசாக 5 பேருக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு பரிசு பெட்டிகள், பருவமழை காலம் என்பதால் 100 பேருக்கு குடைகள் பரிசாக வழங்கப்படுகிறது. அம்மாபேட்டை ஒன்றியம் மற்றும் சின்னபுலியூர், ஓடத்துறை ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இப்பகுதி மக்களுக்கு பரிசுகள் கிடையாது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதோடு பரிசுகளையும் வெல்லுமாறு பவானி தாசில்தார் முத்து கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.