குடியிருப்பு பகுதிக்குள் கம்பி வலையில் சிக்கிய பாம்பை மீட்ட தீயணைப்புத்துறையினர்
Firefighters rescue snake residential area;
குமாரபாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் கம்பி வலையில் சிக்கிய பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்
குமாரபாளையம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வலையில் சிக்கிய பாம்பை மீட்பு படையினர் மீட்டனர்.
குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு காலி இடத்தில் தோட்டம் அமைத்து தனி நபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து இருந்தார். நள்ளிரவில் வந்த பெரிய பாம்பு ஒன்று வேலியில் சிக்கி போக வழியில்லாமல் தவித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மிகவும் அஞ்சினர். இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில், மீட்பு படையினர் நேரில் வந்து பாம்பை லாவகமாக மீட்டனர்.
இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அதிக குடியிருப்புகள் ஆன பின்பும் பலமுறை இங்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. இதுவரை எவ்வித பலனும் இல்லை. இது போல் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் உள்பட அனைவரும் அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பும் போது இது போல் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இனியும் தாமதம் செய்யாமல் மாவட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலன் கருதி மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.