குமாரபாளையம் உணவகத்தில் தீ விபத்து - பரபரப்பு
குமாரபாளையத்தில் இன்று உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காலனி பஸ் நிறுத்தம் அருகில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் புவனேஸ்வரன், 25. காலை இந்த கடையில் இருந்து புகை வந்தது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தந்தனர்.
இதுகுறித்து, குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் வந்து, ஷட்டர் கதவை உடைத்து உள்ளே சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில், டி.வி., யூ.பி.எஸ். உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின.
தீயில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு 50 ஆயிரம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.