குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்பு : நடிகர் கிங்காங் அறிவுரை
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்பில் திரைப்பட நடிகர் கிங்காங் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை கூறினார்.;
குமாரபாளையம் புத்தர் தெரு தொடக்கப் பள்ளி சார்பில், புத்தர் தெரு பகுதியில் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது.
இது குறித்து தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கூறியதாவது:
கொரோனா காலத்தில் பள்ளி செயல்பட முடியாமல், மாணவ, மாணவியர்களின் கல்வி தடை பட்டதால், இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாணாக்கர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் எனும் வகையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பள்ளிக்கு நேற்று வந்த திரைப்பட நடிகர் கிங்காங் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை கூறினார். கிங்காங் பேசியதாவது:
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்கிட தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசின் இந்த உதவியை மாணாக்கர்கள் பயன்படுத்தி கொண்டு நன்கு கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பி.டி.ஏ. தலைவர் வாசுதேவன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் புத்தர் தெரு தொடக்கப்பள்ளி சார்பில் இல்லம் தேடி கல்வி வகுப்பில் திரைப்பட நடிகர் கிங்காங் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை கூறி, புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.