குமாரபாளையம்: அரிதான நோயால் பாதிக்கப்பட்ட மகளுக்கு மருத்துவ உதவி கேட்கும் தந்தை
முதுகெலும்பு தசைநார் சிதைவு [Spinal muscular atrophy-SMA] எனும் அரியதான நோயால் பாதிக்கப்பட்டுள்ள குமாரபாளையத்தை சேர்ந்த சிறுமியின் மருத்துவச்செலவுக்கு உதவுமாறு, அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார். அவருடைய மகள் மித்ரா, மிக அரிய மற்றும் நூதன முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது, அரிதான மரபணு கோளாறால், மித்ராவின் தசைகளை ஒன்றன்பின் ஒன்றாக, கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது.
இதனால், சிறுமி மித்ரா மூச்சு விடவும், உணவை விழுங்க முடியாமலும், பிற குழந்தைகள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு செயல்களையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். சிறுமி மித்ராவின் உயிரை காப்பாற்றுவதற்காக ஸோல்கென்ஸ்மா (Zolgensma) என்ற, ஒருமுறை மரபணு மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது.
ஆனால், இந்த சிகிச்சையை மேற்கொள்ள சுமார் 16 கோடி ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக கூறும் சிறுமியின் தந்தை சதீஷ், அந்த தொகைக்கு வழி தெரியாமல் திகைத்து, கவலையடைந்துள்ளார். மித்ராவின் சிகிச்சைக்கான பணத்தை திரட்டும் வகையில், நன்கொடையாளர்களின் உதவியை கோரி, இணையதளம் வாயிலாக முயன்று வருகிறார்.
சதீஷ் கூறுகையில், 16 லட்சம் பேர் தலா 100 ரூபாய் அளித்தால் கூட என்னுடைய மகளின் சிகிச்சைக்கான பணம் கிடைத்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சதீஷை 9500623402, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.