குமாரபாளையம் நீதி மன்றத்தில் போலி வக்கீல் கைது..!
குமாரபாளையம் நீதி மன்றத்தில் போலி வக்கீல் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையம் அருகே சானார்பாளையம், உழவன் நகரில் வசிப்பவர் மாரிமுத்து, வயது 43. நேற்று குமாரபாளையம் குற்றவியல் நீதி மன்றத்தில் கிரிமினல் வழக்கு சம்பந்தமாக ஆஜராகி, தன் கட்சிக்காரருக்காக வாதாடினார்.
எதிர் தரப்பு வக்கீல் பாஸ்கரன் சந்தேகம் கொண்டு, நீதிபதி சப்னாவிடம் சொல்ல , நீதிபதி தீர விசாரணை செய்ததில் மாரிமுத்து வக்கீல் இல்லை என்பது உறுதியானது. இது குறித்து குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டதுடன், இவருக்கு உதவியாக செயல்பட்ட மகேந்திரன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க மனுவில் குறிப்பிடப்பட்டது. போலீசார் விசாரணையில் இவரது பெயரை மோகன கண்ணன் என்றும், 5, பள்ளிக்கருணை, சீனிவாச நகர், சென்னை என்ற விலாசத்தில் இருப்பதும், சென்னை, ஈரோடு, உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வாதாடி வந்ததும் தெரிய வந்தது. பல முக்கிய பிரமுகர்களை மிரட்டியதும் தெரியவந்தது. இவரது அடையாள அட்டையில் பதிவு எண் 1360/2006 என குறிப்பிடப்பட்டு இருந்தது. போலீசார் விசாரணையில் அந்த எண், கூத்தலிங்கம், திருநெல்வேலி என்பவருடையது என்பது தெரியவந்துள்ளது. இவர் இவர் கால் ஊனமுற்றவர். கைத்தடி கொண்டுதான் நடந்து வருகிறார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவரை கைது செய்தனர்.