மறைவுக்கு பின் கண்தானம்- மநீம நிர்வாகிக்கு அனைத்து கட்சியினர் புகழாரம்

குமாரபாளையத்தில், மக்கள் நீதி மய்ய நிர்வாகி மறைந்தும் கண் தானம் வழங்கியது, பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

Update: 2021-12-02 09:45 GMT

அறிவொளி சரவணன்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நகர செயலர் சரவணன்,  மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலை 07:30 மணியளவில் இறந்தார். இவர் கண் தானம் செய்வதாக முன்பே அறிவித்திருந்தார். அதன்படி, ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் நேரில் வந்து கண் தானம் பெற்றனர். இறந்த பின்னரும் கண் தானம் வழங்கி, முன்னுதாரணத்தை ஏற்படுத்திய சரவணன் செயலை பலரும் பாராட்டினர்.

அத்துடன், சரவணனின் இறுதிச்சடங்கு, மக்கள் நீதி மய்யம்  மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், தி.மு.க. , அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து பொதுநல அமைப்பினர் பங்கேற்றனர். அத்துடன், சரவணன் குடும்பத்திற்கு அனைவரும் ஒன்றுகூடி நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது. முதற்கட்டமாக அஞ்சலி கூட்டத்திலேயே 60 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது.

அறிவொளி சரவணன் அஞ்சலி கூட்டத்தில், அ.தி.மு.க சார்பில் சிங்காரவேல், தி.மு.க. சார்பில் ரவி, காங்கிரஸ் சார்பில் ஜானகிராமன், தே.மு.தி.க. சார்பில் மகாலிங்கம், ம.தி.மு.க. சார்பில் விஸ்வநாதன், பா.ஜ.க. சுகுமார், திராவிடர் விடுதலை கழகம் சாமிநாதன், தமிழ் தேசிய பேரியக்கம் ஆறுமுகம், இலக்கிய தளம் அன்பழகன், மொழிப்போர் தியாகிகள் அமைப்பு குழு பகலவன், விடியல் ஆரம்பம் பிரகாஸ், அட்சயம் அறக்கட்டளை நவீன்குமார், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், ஓவியர் சங்கம் குணா, கதிரவன், ஜல்லிக்கட்டு பேரவை வினோத்குமார், சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் தலைவர் பிரபாகரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சுப்ரமணி, நாட்டுபுற கலைக்குழு பாடகர் சமர்ப்பா குமரன், அறிவொளி தாமரை செல்வன், மனித உரிமை கழகம் கோபிராவ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சரவணன் குடும்பத்தார் சார்பில் செல்வராஜ் நன்றி கூறினார். மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மாவட்ட செயலர் காமராஜ், சிவகுமார், நந்தகுமார், சரவணன், மகளிரணி நகர செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News