அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
குமாரபாளையம் அருகே அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.
குமாரபாளையம் அருகே தேவூர் மற்றும் அரசிராமணி பேரூராட்சி பகுதியில் தலா 15 வேட்பாளர்கள் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்கள். இந்த 30 வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று கோனகழுத்தானூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இவர் பேசியதாவது: தேவூர், அரசிராமணி பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவில்தான் சிலுவம்பாளையம் உள்ளது. அங்குதான் என் வீடு உள்ளது. நான் உங்களுக்கு நன்றாக தெரிந்தவர். நன்கு தெரிந்தவரை விட்டு விட்டு, தெரியாதவர்களுக்கு ஓட்டு போட்டால் ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும். அடிப்படை தேவையான குடிநீர், தெருவிளக்கு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் தீர்க்க கூடிய அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. நமது பேரூராட்சியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டால் அடிப்படை பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும். அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல், நகை கடன் தள்ளுபடி முழுமையாக செய்யப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் திமுக அரசின் மீது உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சங்ககிரி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலர் ரத்தினம், சங்ககிரி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி, சங்ககிரி ஒன்றிய குழு துணை தலைவர் சிவகுமாரன், தேவூர் நகர செயலர் கிருஷ்ணன், அரசிராமணி நகர செயலர் காளியப்பன், ஒன்றிய அம்மா பேரவை செயலர் ராஜா, கோனேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதா பாலு, புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், காவேரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அல்லிராணி, காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், தகவல் தொழிநுட்ப அணி யுவராஜ், உள்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.