சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 6 ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
குமாரபாளையம் அருகே, சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் அதிக சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. சில சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், காவிரி ஆற்றில் கலந்து, குடிநீர் மாசு அடைந்து வருகிறது. இதனை தடுக்க, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சாய ஆலைகளை ஆய்வு செய்து இடித்து வருகிறார்கள்.
இதற்கு நிரந்தர தீர்வு காண, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். சாய ஆலை உரிமையாளர்கள் பங்களிப்புடன், இடம் வாங்கப்பட்டது. சாய ஆலைகள் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
ஆனால், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால், விவசாய நிலங்கள் அனைத்தும் இப்பகுதியில் வீணாகும் என்று கூறி, 6 ஊராட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன், அதன் நிர்வாகிகள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில், தங்கள் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், இலந்தைகுட்டை ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், சவுதாபுரம் ஜெயந்தி, பல்லக்காபாளையம் நாச்சிமுத்து, தட்டான்குட்டை புஸ்பா, களியனூர் ரவி, களியனூர் அமானி அம்மாசை உள்ளிட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலோர் பங்கேற்றனர்.