குமாரபாளையம் சேர்மன் பதவி தொடர்பாக பரவும் வாட்ஸ் அப் தகவலால் பரபரப்பு
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் பதவி தொடர்பாக வாட்ஸ் அப்பில் பரவும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நகராட்சி தலைவர் பதவியை அடைய 33 வார்டுகளிலும் தனது சார்பில் சுயேச்சை வேட்பாளர்களை நிற்க வைத்தார் என்றும், இது தவிர அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை , பல லட்சம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கினார் என்றும், அதனால் நகராட்சி சேர்மன் பதவியை அடைந்தார் என்றும் வாட்ஸ் அப் ஆடியோ தகவல் பரவியது.
இதே போல் சேர்மன் தரப்பினர் தி.மு.க. சேர்மன் வேட்பாளருக்கு ஓட்டு போட எத்தனை லட்சம் ரூபாய் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு கொடுக்கப்பட்டது ? இது யாருக்கும் தெரியாதா? அவ்வாறு இல்லையெனில் தி.மு.க. சேர்மன் வேட்பாளருக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதற்கு ஓட்டு போட்டார்கள்? என மற்றொரு வாட்ஸ் அப் தகவலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படியே போனால் நகராட்சி நிர்வாகம் என்னவாகும் என பொதுமக்கள் வருத்தம் கொள்கின்றனர். பணம் இல்லாதவன் நல்லவனாக இருந்தாலும், பொதுநல அக்கறை உள்ளவனாக இருந்தாலும் பணம் கொடுக்காமல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாதா ? பணம் உள்ளவன் மட்டுமே பதவிக்கு வர முடியுமா? என சமூக ஆர்வலர்கள் கேட்டு வருகின்றனர்