குமாரபாளையம் அருகே பக்கெட் நீரில் மூழ்கி 9 மாத குழந்தை உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே பக்கெட் நீரில் மூழ்கி 9 மாத குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(26). இவர் குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியிலுள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். மேட்டுக்கடை பகுதியில் இவரது வீடு உள்ளது. அங்கு இவரது குடும்பத்தை சேர்ந்த மனைவி, மூன்று குழந்தைகளை வீட்டில் தங்க வைத்து விட்டு நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றார்.
நேற்று காலை 7 மணியளவில் வேலை முடிந்து வந்தபோது, மூன்றாவது குழந்தையான 9 மாத ஆண் குழந்தை சர்வேஸ் மட்டும் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தான். பாத்ரூமில் குளித்து விட்டு வந்து பார்த்த போது, குழந்தை அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் மூழ்கியபடி கிடந்தது.
உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.