குடியிருப்புப் பகுதியில் மதுபான கடை வேண்டாம்
- ஊர் இளைஞர்கள் கையெழுத்து இயக்கம்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இதில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிபாளையம் பெரியார் நகர் ஆற்றங்கரையோரம் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அரசு மதுபான கடை வர உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் ஊர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பெரியார் நகர் பகுதியில் சந்து மதுக்கடைகளால் பெண்களுக்கு ஆபத்து உள்ள சூழலில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எனவே பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் மதுபான கடை திறந்தால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் எனவும், எனவே இந்த மதுபான கடை வரக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது. இதனடிப்படையில் கையெழுத்து இயக்கம் இன்று பெரியார் நகர் பகுதி முழுவதும் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் நம்மிடையே தெரிவித்தனர்.